எனது வாழ்க்கை விளக்கம் 

 

எனது வாழ்க்கை விளக்கம் - 10 - I

வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும். உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே. அதிலிருந்து கிளைக்கும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களும் ஆகும். உடலை விட்டு உயிர் பிரிந்தால் அதோடு அந்த மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடுகின்றன. எனினும் சமுதாயக் கூட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களில் வேறு பலர் பின்னப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஒருவன் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்துவிட்டாலும் அவனோடு பின்னப்பட்டிருந்தவர்களிடம் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும். சிக்கலில்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில், எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான். தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்கள்தான் இதற்கு விதிவிலக்கு.

                       ஒரு மனிதனுக்குப் பசி, வெப்ப தட்ப ஏற்ற உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்து வேகம் இவையே அவ்வப்போது தோன்றிக் கொண்டிருக்கும் இயற்கை வழி வந்த சிக்கல்கள். இவற்றிற்கு இயற்கை வளம், அறிவு வளம், உடல் வளம் என்ற மூன்றும் கூடினால், முறையாகக் காலா காலத்தில் இயற்கைச் சிக்கல்களைப் போக்கிக் கொள்ளலாம். புலன் கவர்ச்சியில் வாழும் மனிதனுக்குத் தன்னை மறந்து அளவு மீறியும் முறை மாறியும் செயலாற்றும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாழ்வில் சிக்கல்கள் செயற்கை முறையில்  - அறிவின் குறையால் உணர்ச்சி வயப்பட்டு ஆற்றும் செயல்களால் பெருகுகின்றன.

                        தன் இயற்கையான தேவைகட்கு இன்றியமையாத பொருள்களையும் வசதிகளையும் மாத்திரம் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் சிக்கல்கள் இருப்பதே தெரியாது. தினசரி வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு ஒரு மனிதன் வாழ்க்கைச் சிக்கல்கள் பெருகுகின்றன. தனது பாதுகாப்பில் வாழக்கூடிய மக்கள் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு அச்சிக்கல்கள் மேலும் பலமடங்கு பெருக்கமடைகின்றன. இவ்வளவையும் அறிந்த மனிதன்தான், சிக்கல்களை வளரவிடாமல், இருக்கதும் சிக்கல்களை நுட்பமான முறையில் போக்கிச்கொண்டு, தெளிவோடு வாழ்வான்.

எனது வாழ்க்கை விளக்கம் - 10 - II

 என் வாழ்விலும் இத்தகைய முறையில் உருவான சிக்கல்கள் பல. அவற்றில் மக்கட்பேறு இல்லாமையும், அதன் காரணமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டதும், எவ்வளவோ சிக்கல்களைப் பெருக்கி விட்டன. எனினும் நான் சிந்தனையில் ஆழ்ந்து தத்துவ விளக்கம் தெளிவாகப் பெற்றபின் அச்சிக்கல்களை எதிர்த்து எளிதில் வெற்றிபெற முடிந்தது. முதலில் மக்கட்பேறு இல்லாத குறை இருந்தது. அது நாளுக்கு நாள் மறந்தே போய்விட்டது. மேலும் மக்கட் பேறின்மையும் எக்காரணத்தால் என்ற சிந்தனையில் ஆழ்ந்த போது எனக்குச் சில விளக்கங்கள் கிட்டின. மக்கட் பேரின்மைக்கு மூன்று காரணங்கள் உண்டு. (1) இளமையில் திருமணம் மறுத்து சன்யாசம் கொள்ளுதல் (2) உடல்நலக் கேட்டினால் விந்து கெட்டுப் போய்விடல் (3) வினைகள் கழிக்கப் பெற்றுப் பரம் பொருளோடு உயிர் இணைந்து நிற்கும் தவம் சித்தி. இவற்றில் மூன்றாவது காரணத்தால்தான் எனக்குக் குழந்தை பிறக்கவில்லையென்பதைத் தெளிவாக உணர்ந்தேன். என் சிறுவயதில் அடிக்கடி பஜனைக்குச் செல்வேன். அங்கு தாயுமானவர் பாடல்களில் ஒன்றான "அங்கிங்கெனாதபடி" என்று தொடங்கும் பாடலை விருத்தமாகப் பாடுவார்கள். அந்தக் கவியில் பொருளுணர்ந்து அதே நிலையில் ஆழ்ந்து நின்று விடுவேன். பின்னர் வீட்டுக்கு வந்த பின்னும் அப்பாடலை மனனம் செய்து இரசிப்பேன்.

        "பிறவிப் பெருங்கடல் நீந்துவர்: நீந்தார்
         இறைவனடி சேராதார்.

        "வீழ்நாள் படா அமைநன்றாற்றின் அஃதொருவன்
         வாழ்நாள் வழியடைக்குங்கல்."

             என்னும் வள்ளுவர் கருத்துக்கு ஒப்ப எனக்கு அடிக்கடி மெய்ப் பொருளோடு இணைந்து இலயமாகும் பேறு, சிறுவயது முதலே கிடைத்தது. ஆயினும் அதைத் தெளிவாக விளக்கம் பெறப் பல ஆண்டுகள் சென்றன. செயல்களிலும் ஒழுக்கம் பிறழாத அறவழியே செயலாற்றி வாழ்ந்தேன். கடவுளைச் சேர்ந்து முக்தி பெறவேண்டும் என்பதே, சிறுவயது முதல் ஏற்பட்ட அவா. இக்காரணங்களால் பிறவிக்கு உரிய தொடர்பு அறுந்துவிட்டது. மேலும் விந்தின் மூலம்தான் பிறவித்தொடர் என்ற விளக்கமும் கிடைத்த பின்னர், எனக்குக் குழந்தை இல்லைேயே என்ற குறை அறவே அற்றுப் போயிற்று. என் மனைவிகட்கும் ஞானாம்பிகையை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், ஓரளவு குழந்தை வேட்பு அடங்கி விட்டது. அவர்கள் ஆசைகளை யெல்லாம் குடும்பத்திற்கு ஒரே குழந்தையாக வந்த செல்வப் பெண் ஞானத்தை வளர்ப்பதில் திருப்பி விட்டார்கள். அவளைக் காலத்தோடு பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தோம். அவளுக்கு வயது பத்து இருக்கும். அப்போது ஒரு நாள் அவள் எனது நண்பர், அருட்செல்வர் திரு. ஆ. சொக்கலிங்கம் என்பவரை ஒரு கதை சொல்லும்படி கேட்டாள். அவர் மிகவும் அன்போடு திருவள்ளுவர் கதையை எடுத்துச் சொன்னார். அந்தக் கதையில் மணலைச் சோறாக்கி  படைத்தார் வாசுகி. அதனால்தான் அவள் பெருமையுணர்ந்து அவளைத் திருவள்ளுவர் திருமணம் செய்து கொண்டார் என்று கதைப் போக்குப்படி என் நண்பர் கூறினார். பொறுமையோடு இதுவரையில் கேட்டுக் கொண்டிருந்த ஞானம். இங்கு சொக்கலிங்கம் அவர்களைக் குறுக்கிட்டாள். நீங்கள் சொல்வது பொய்க்கதை. மணலை எப்படி சோறாக்க முடியும்?  அது முடியாத காரியம். ஆகவே, இந்த மாதிரி பொய்யான கதையை ஏன் சொல்லுகிறீர்கள்?  என்று இடைமறித்து வினவினாள். நண்பர் ஏதேதோ சமாதானம் கூறிப் பார்த்தார். ஏற்கவே இல்லை. அந்த வேளையில் நான் அங்கு வந்தேன். உடனே நண்பர் என்னைப் பார்த்து என்னங்க திருவள்ளுவர் கதையைச் சொன்னேன். அதில் வரும் மணலைச் சோறாக்கும் நிகழ்ச்சி பொய் என்று கூறி வாதம் செய்கிறாள் ஞானம். நீங்களாகிலும் கொஞ்சம் அவளுக்குச் சமாதானம் கூறுங்கள் என்றார். உடனே நான் அவர்களோடு உட்கார்ந்தேன். கதை உண்மைதானம்மா. ஆனால் கருத்து அதில் மறைக்கப் பெற்றிருக்கிறது என்ற அந்த மறைபொருளை அவள் விளங்கிக் கொள்ளுமாறு உணர்த்தினேன். அவளுக்கும் நிறைவு ஏற்பட்டது. நண்பரும் மனமாற்றம் அடைந்தார். இரண்டு நாட்களில் அந்த நிகழ்ச்சிகள் ஐந்து பாடல்களாக உருவாயின. அவற்றைப் படியுங்கள்.

எனது வாழ்க்கை விளக்கம் - 10 - III

பகுத்தறிவு வாதம்

 "எனது மகள் ஞானமெனும் சிறுமி ஓர்நாள்
     என் நண்பரை நோக்கிக் கதை சொல்லென்றாள்
  மனது மிக உற்சாகம் கொண்ட வட்கு
     மாமுனிவர் வள்ளுவர் கதையைச் சொன்னார்
  உனது கதை சரியில்லை மணலைச் சோறாய்
     ஒருவருமே சமைக்கு முடியாதென்றாள் பின்
  நினது கருத்தென்னென்று என்னைக் கேட்டாள்
     நீதிபதி பொறுப்பேற்றேன் இருவர் முன்னே. "

அறிவின் திறனால் உணர்த்திய காதல்
 
 "உத்தமியாள் அறிவுடையாள் பதியாய்த் தன்னை
    உவந்தேற்பாள் ஒருவளைத் தேர்ந்திட வள்ளுவர்
  பித்தனைப்போல் மணல் முடிச்சுடன் திரிந்தார்
    பேரறிவால் வாசுகி யூகித்தறிந்தாள்
  வித்தையெனப்பலர் முன்னே மணல் கைக்கொண்டாள்
    வீசியெறிந்தாள் மறைவில் அரிசிச்சாதம்
  சித்தம்மகிழ்ந்தே படைத்துச் சூழ்ந்தோர்க் கெல்லாம்
    சிந்தை நிலையறிவித்தாள் எனநான் சொன்னேன்."
 
நண்பர் சிந்தனை
 
   "இப்படித்தான் அந்தகதை இருக்க வேண்டும்
      ஏன்அதனை மாற்றிவிட்டார் என்றார் நண்பர்
   ஒப்பற்ற உயர்வான அறிவின் ஆற்றல்
      உடையவர்களில் கூட பலபேர் இன்று
   எப்போதும் கற்பனையில் ஆழ்ந்து ஆழ்ந்து
      இன்பமடையும் பழக்கம் கொண்டுள்ளார்கள்
   அப்படியே அவரவர்கள் போக்குக் கேற்ப
      அறிவிற்கு விருந்தளிக்கும் தொண்டீதென்றேன்."

மனங்கவர வியப்பூட்டல்
 
   "அணுவினிடம் பரிணாமம் ஈர்ப் பியக்கம்
      அறிந்து விட்டோர் பெருகிவிட்ட காலம்ஈது
   அணுஅணுவாய் ஆராய்ந்து பார்த்து விட்டோம்
      அரிசியின்றி சோறாக மணல் மாறாது
   அணுஞானம் இன்னதென்றே தெரியா தோர்கள்
      அறிவிற்கு வியப்பூட்ட விருப்பம் கொண்டோர்
   அணுதத்துவத்திற்கே முரணாய் அந்நாள்
      அனேக கதைகளை இதுபோல் செய்தார் என்றேன்."

நண்பர் முடிவு
 
   "பத்துவய துடைய சிறுபெண் தொடுத்த
      பகுத்தறிவு வாதத்தைக் கேட்டேன் இன்று
   இத்தனைநாள் வரையில் இந்தக் கதையின் நுட்பம்
      என்னவென்று ஆராயப் புகுந்தேனில்லை
   எத்தனையோ கதைகளில் வரும் இதனைப் போன்ற
      இயற்கைக்கு ஒவ்வாத நிகழ்ச்சி நம்பும்
   தொத்து நோய் தனிலிருந்து தெளிவு காணும்
      துணிவுஇன்றே பிறந்து விட்டதென்றார் நண்பர்."

            இந்தக் கதையில் ஒரு நுட்பம் இருக்கிறது. வள்ளுவர் அறிவிற் சிறந்தவளாகவும், தன்னை விரும்பி, கணவனாக ஏற்றுக் கொள்பவளாகவும் ஒரு பெண்ணைத் தேர்தெடுக்கத் திட்டமிட்டார். மணலை முடிச்சுப் போட்டுக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து வந்தார். இந்த மணலை வாங்கிக் கொண்டு சாதம் சமைத்து எனக்கு அளிக்கும் ஒரு நல்லாளைத் தேடுகின்றேன் என்றார். எவரும் அதில் உள்ள நுட்பத்தை உணரவில்லை. வாசுகி அறிவு நுட்பத்தால் இந்த மறைபொருளை உணர்ந்து கொண்டாள். மேலும் வள்ளுவரை மணந்து கொள்ளவும் முடிவு கொண்டாள். நான் உங்களுக்குச் சோறு சமைத்துப் போடுகிறேன் என்று மணலை முறத்தில் வாங்கிக் கொணடாள். அதைக் கொட்டிவிட்டு அரிசி போட்டுச் சமைத்து, சாப்பாடு போட்டாள். திருவள்ளுவருக்கு இதனால் அவள் தன்னை விரும்பி ஏற்றுக் கொண்டாள் என்பது உணரப் பெறுகிறது. அதற்காகவே கையாண்ட தந்திரம்தான், மணல் முடிச்சு என்பதை உணர்ந்து, அதைப் பெற்றுக் கொண்டதனால், அவள் அறிவுக் கூர்மை உணரப் பெறுகிறது. இந்த இரண்டு தகுதிகளையே எதிர்பார்த்தார் திருவள்ளுவர். அத்தகுதியுள்ள ஒருத்தியைத் தேர்ந்து திருமணம் முடித்து இல்லறம் ஏற்றார். இவ்வாறு தான் அந்தக் கதையின் கருத்து இருக்க வேண்டும் என்று நான் விளக்கினேன்.

         சித்து விளையாடல் மூலம் ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியும், இல்லாத பொருளை வரவழைத்தும் சிலர் காட்டுவார்கள். நாம் பார்க்கிறோம். இவ்வாறு வாசுகியம்மைறாரும் செய்திருக்கலாமல்லவா?  எனச் சிலர் எண்ணலாம். சித்து என்பது ஒருவர் பிறரை, ஏமாற்றும், ஏய்க்கும், ஒருவித கலையாகும். இது அறிவின் உயர்வின்பாற் பட்டதல்ல. ஆன்மீக வளர்ச்சியின் உயர்வின் எடுத்துக் காட்டுமல்ல. அம்முறையில் வாசுகி செய்திருந்தால் வள்ளுவர் அவளை மணந்திருக்க மாட்டார். ஏன்?  அவர் அறிவிற் சிறந்தவர். மெய் விளக்கம் பெற்றவர். இவ்வகையில் விரிந்த என் விளக்கம் கேட்டு இருவரும் அமைதி பெற்றனர். இந்தக் கவிகளையும் பிறகு அச்சடித்து அப்போது வெளியிட்டேன். பலர் படித்து மகிழ்ந்தார்கள்.

          என் வாழ்நாட்கள் எல்லாம் சிந்தனையிலேயே கழித்து வந்தேன். சிந்தித்த முடிவுபடி செயல்புரிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனினும் பொதுவாக மனித இயல்பான மயக்கமும் அவ்வப்போது எழத்தான் செய்தது. எப்போதோ ஒரு செயல் பழக்கத்தின் வழியே நடந்து தவறான விளைவுகளையும் தரும்.

நான் செய்த இரண்டு கொடுமைகள்

என் வாழ்விலே நான் மறக்க முடியாத தவறாக இரண்டு கொடுமைச் செயல்களைச் செய்துவிட்டேன். அவை உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சினத்தின் எழுச்சியால் விளைந்தவை.

          நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன். அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு. ஒரு சிறு பையன், எட்டு வயது இருக்கும். அவன் மட்டித் தனமாக இருந்தான். அவன் பாடங்களைச் சரியாகப் படிக்கவில்லையென்று, பிரம்பினால் கைபோனபடி கீழும் மேலும் திருப்பித் திருப்பி விளாசி விட்டேன். அந்தக் குழந்தை பதை பதைத்து அழுத காட்சி என் உள்ளத்தை உருக்கிவிட்டது. "சார்! சார்! வலிக்கிறது சார்! தாங்க முடியவில்லை சார்" என்று அவன் கெஞ்சிய கூச்சலில், என் மனம் உடனே விழிப்பு நிலை பெற்றது. உடனே அவனை அணைத்துக் கொண்டேன். மற்ற குழந்தைகள் எல்லோரும் எங்களையே பார்க்கின்றனர். எனது கண்களில் நீர் பெருகிவிட்டது. பிரம்பை வீசி எறிந்து விட்டேன். இனிமேல் நன்றாக படியப்பா. நான் அடிக்க மாட்டேன். நன்றாகக் கற்றுக் கொடுக்கிறேன் என்று, பாடம் சொல்லத் தொடங்கினேன். இடது கையால் அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டு அவன் கையில் பிடித்திருக்கும் புத்தகத்தில் வலக்கை விரலால் எழுத்துக்களைக் காட்டிப் பாடம் சொன்னேன். எனது கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. குரல் கம்மிவிட்டது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுச் சற்று முன்னதாகவே வீட்டுக்குப் போய் விட்டேன். அன்று முழுவதும் எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை, என் கைப் பிரம்பு. இரக்கமற்ற முறையில் நான் கொடுத்த அடி, அந்தக் குழந்தைக்கு நான் அன்று செய்த கொடுமை, திருப்பித் திருப்பி என் மனதை வாட்டியது. அன்று இரவு எனக்கு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டேயிருந்தது. அன்று முதல் குழந்தைகளை நான் அடிப்பதே இல்லை. அது மாத்திரம் இல்லை. எந்தக் குழந்தையைக் கண்டாலும் அன்பு பாராட்டத் தொடங்கினேன். இது ஒரு கொடுமை. நான் என்னை மறந்து சினத்தால் ஆற்றியது.

          என் வயது முப்பத்தி ஏழு. அப்போது ஒரு கொடுஞ்செயல் செய்துவிட்டேன். எனது இளைய மனைவி இலட்சுமி நான் குளிக்கும் இடத்திற்கு உடம்பு தேய்க்க வந்தாள். மார்கழி மாதம். குளிர் நடுங்குகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் நான் முதலில் தண்ணீரைத் தொட்டு உடல் முழுக்கத் தேய்த்துச் சிறிது தோலுக்கு உணர்ச்சி மாற்றம் ஏற்பட செய்து, பிறகே குவளையினால் நீர் எடுத்துத் தலையிலும், உடம்பிலும் ஊற்றுவேன். அதுபோல் சிறுகச் சிறுகத் தண்ணீர் எடுத்து உடம்பில் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் இலட்சுமி, கையில் ஒரு வாளி எடுத்து நீர் நிறைய மொண்டு ஏன் இவ்வாறு பயப்படுகிறீர்கள். ஒரு வாளி ஒரே தடவையாக ஊற்றினால் குளிர் தெளிந்துவிடும் என்று தலையில் ஊற்றிவிட்டாள். எனக்கு தாங்க முடியாத உணர்ச்சி ஏற்பட்டது. சினம் மீறி விட்டது. குளிர் எப்படி இருக்கிறது என்று நீ பார் என்று நான் ஒரு வாளி தண்ணீரை மொண்டு அவள் தலையில் அப்படியே ஊற்றி விட்டேன். அவள் ஒன்றுமே பேசவில்லை. சிலைபோல் நின்றுவிட்டாள். தலையில் ஒழுகும் தண்ணீரை வழித்துவிட்டுக் கொண்டாள். ஆனால், அவள் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது. முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விக்கினாள். அவளுக்குக் குளிர் ஏற்படச் செய்தது, அப்படி ஒன்றும் கொடுமை அல்ல. அவள் தன் கணவன் என்ற உரிமையில் விளையாட்டாக என் மீது குளிர்ந்த நீரை ஊற்றினாள். ஆனால் அவள் புண்படும் வகையில், நான் சினம்கொண்டு அவளிடம் நடந்துகொண்ட விதம், மிகவும் கொடுமை என உணர்ந்தேன். உடனே அவளுக்கு ஆறுதல் கூறினேன். எனினும் எனக்கு மட்டும் ஆறுதல் கிட்டவில்லை. இத்தகைய முறையில் சினம் எழாமல் காக்க முனைந்தேன். பல வழிகளைப் பின்பற்றினேன். அதன் தொடரில் வந்த சிந்தனைத் தெளிவே, அறுகுணச் சீரமைப்பு என்ற ஒரு பெரிய உலக நலக் கருத்து உருவாகியது. தற்சோதனை எனும் உளப்பயிற்சி முறை உருவாயிற்று.

        தவறு செய்தல் எல்லோருக்கும் இயல்புதான். சிந்தனை ஆற்றல் இல்லாதவர்கள். அந்தத் தவறுகளைப் பெருக்கிக் கொண்டே போவார்கள். சிந்தனைத் திறன் உடையவர்கள் தவறு செய்து விட்டால் அதன் விளைவைக் கணித்து, தாம் இனி அத்தவறு செய்யாத விழிப்பு அடைவதோடு, மற்றவர்களும் இத்தகைய தவறு புரியாமலிருக்க என்ன வழியுண்டு என்று ஆராய்ந்து முடிவு கண்டு, பயன் விளைப்பார்கள். இத்தகைய முயற்சியிலே விளைந்த கவி இங்கே படியுங்கள்.

        "அறிவைப் புலன்களில் அதிக நாள் பழக்கினேன்
          அதன்பயன் உணர்ச்சிகள் அறிவை வென்றன
         அறிவை யறிவால் ஆராயப் பழகினேன்
          அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்
         அறிவு அகண்டா காரத்தில் நிலைபெற
          அதிக விழிப்பும் பழக்கமும் பெற்றது
         அறிவு புலன்களை அறிந்தது வென்றது
           அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்".

           மனிதனும் தெய்வமும்

  இருப்புநிலை இறைவெளியாம் ஈர்ப்பு ஆற்றலாகும்
     இயக்கம் அதன் நுண்பகுதி எதிர்த்து தள்ளும் ஆற்றல்
  கருப்பொருளாம் இவ்விரண்டும் காந்தம் என்ப தாச்சு
     காணுகின்றோம் பேரியக்க களத்தில் உயிர்வகையில்
  திருப்பொருளாய் இயங்கும் மனம் தேர்ந்து இறையுணர
     தெய்வம் ஈர்ப்பு அறிவாயும் அதன் திணிவே அலையாய்
  விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் உணரும் மனம் அறிவோம்
     வேண்டல் வளம் கண்டு வினை விளைவறிந்து வாழ்வோம்.
 
  பேரியக்க மண்டலத்தில் பெரிய பெருங்கோள்கள்
     பிறப்பு இறப்பிடை மனிதன் பிறஉயிர் அனைத்தும்
  சீரியக்க ஆற்றல் காந்த சிறப்பென உணர்ந்தால்
    செத்துப் போகவே பிறந்து வாழும் மாந்தர் வாழ்வில்
  போரியக்கக் காரணமாம் 'தான்' 'தனது'' என்னும்
    பொருள், புகழ், செல்வாக்குப் புலன் மயக்கம் வாழ்வில்
  வேரழிக்கும் அறுகுணங்கள் ஐந்து பழிச்செயல்கள்
    விளையாது நட்பு அன்பு கருணை இவை ஓங்கும்.

 
  அஞ்சுவதேன் துணிந்து சொல்வோம் அறிவது நான் தெய்வம்
    அதுவேதான் வான்காந்தம் அகண்டமண்டலத்தில்
  பஞ்சமிலா விண்மையப் பகுதி இறை அறிவாம்
    படர்க்கைநிலை மனம் அது நாம் பகரும் சீவகாந்தம்
  வஞ்சமிலா சிவகாந்தம் வான் காந்தம் இரண்டே
    வாழ்உயிர்கள் வான்கோள்கள் வளம் ஒழுங்கு காக்கும்
  பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகிக்கொண்ட மனிதன்
    பரவசமாய் இன்பமுறப் பாடினேன் இவ்வுண்மை.

எனது வாழ்க்கை விளக்கம் - 11

எனக்கு இளம் வயதில் ஏற்பட்ட ஐயங்கள் மூன்று. அவை :

முதலாவது, தெய்வத்தைப் பற்றியது. கடவுள் யார்?  எங்கே எப்படி உள்ளார்?  அவரைக் காண்பது எப்படி?

இரண்டாவது, ஐயம், உயிரைப் பற்றியது. உயிர் என்பது என்ன?  எங்கிருந்து எப்படி வந்தது?  பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்குப் பின்னும் உயிரின் நிலை என்ன?

               மூன்றாவது, வறுமையைப் பற்றியது. அது இயற்கையா?  செயற்கையா?  அதனைப் போக்க முடியுமா?  அப்படியானால் எவ்விதம்?  இம்மூன்று வினாக்களுக்கும், எனது வயது முப்பத்து ஐந்துக்குள் தெளிவான விளக்கங்களைக் கண்டு விட்டேன். தோற்றமாகக் காணும் எப்பொருளிலும் மெய்ப் பொருளாக இருப்பதுதான் தெய்வம். அதனுடைய நுண்ணிய இயக்க ஆற்றலே விண் எனப்படும் ஆகாசம், ஆகாசத்தின் திரட்சிநிலை வேறுபாடுகள்தான் காற்று, நெருப்பு, நீர், நிலம் மற்ற நான்கு பூதங்களும். உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்திலும், ஆகாசமெனும் நுண்ணியக்கமே உணர்ச்சி ஆற்றல் பெற்று உயிராக இயங்குகிறது. உயிரே தனது புலன்கள் மூலம் அது மேலும் சிறப்படைந்த நிலையில்் அறிவுமாகி இயங்குகின்றது. மனிதன் இயற்கை வளத்தைத் தனது உழைப்பையும், அறிவுத் திறனையும் கொண்டு உருமாற்றித் துய்த்து வாழப் பழகிக் கொண்டான். இயற்கை ஒழுங்கமைப்பையும், உழைப்பின் பெருமையையும் உணராதோர், கடமை பிறழ்வதே வறுமையாக மலர்கின்றது. தெய்வநிலை, உயர்நிலை, அறிவு, உழைப்பு இரண்டின் மதிப்பு, இவற்றை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால், மகிழ்ச்சியோடும், அமைதியோடும் எல்லோரும் வாழலாம். சிலர் உணர்ந்து கடமை செய்தும், பலர் உணராமல் கடமை பிறழ்ந்தும் வாழ்வதே, உலகில் உள்ள வறுமைக்கும், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். எல்லாம் வல்ல மெய்ப்பொருளே உயிராகவும் அறிவாகவும் மலர்ந்து இருப்பினும், புலன்கள் மயக்கத்்தில் தனது ஆற்றலைக் கட்டுப்படுத்திக்கொண்டு மயக்க நிலையில், செயலாற்றுவதால் பழிச்செயல்கள் பெருகின்றன.

                சிந்திக்கும் ஆற்றலுள்ள மக்களெல்லோரும் இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் அவர்கள் தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் எனும் ஐவகைக் கடமைகளையும் முறையாக ஆற்றினால் தனி மனிதன் வாழ்வும், சமுதாய வாழ்வும் இன்ப மயமாகவே இருக்கும். மனித சமுதாயம் என்ற பேரவையில் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டுள்ள ஒவ்வொரு தனி மனிதனும், எல்லோருக்கும் ஒத்தும் உதவியும்தான் வாழ வேண்டு்ம். இன்றேல் ஒருவரால் பிறருக்கு உரிமைக்கேடும் துன்பமுமே விளையும். மயக்க நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களோடு தங்களுக்கோ பிறருக்கோ அறிவிற்கோ உடல் உணர்ச்சிக்கோ தீங்கு விளைவிக்காத முறையில் மக்கள் அனைவரும் கூட்டுறவு பூண்டு வாழ வேண்டும். அப்போதுதான் மனிதகுல வாழ்வில் அமைதி நிலவும் என மெய்யறிவு பெற்றவர்கள் உணர்ந்தனர். அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறியே மதம் (Religion) எனப்படுகின்றது. நெறி பிறழ்ந்தவர்களைத் திருத்தவும், தண்டிக்கவும் ஏற்ற ஒழுங்கு முறைகளும் மெய்யறிவு பெற்றவர்களால்தான், ஆட்சிச் சட்டமாகவும் அவற்றின் திருத்தங்களாகவும் புகுத்தப் பெற்றன.

எனது வாழ்க்கை விளக்கம் - 11 - II

எனினும் மதங்களும் ஆட்சியும் இன்று வரையில் மனிதகுல வாழ்வில் அமைதி ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை. காரணம்; தெய்வநிலை, உயிர்நிலை, வாழ்வின் வளம் காக்கும் பொருளாதார நிலையறிந்தவர்கள் மதத்தையும் ஆட்சியையும்நிர்வகிக்கும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த உண்மைகளையெல்லாம் நான் உணர்ந்துகொண்டேன். தெளிவான விளக்கம் பெற்றாயிற்று. எனினும் இந்த நிலையில் நான் செய்ய வேண்டியதென்ன?  இந்த வினா என் உள்ளத்தில் எழுந்துிவிட்டது. உலகம், மனித சமுதாயம், ஒவ்வொரு தனி மனிதனையும் பெற்றெடுக்கின்றது. உடல்வலிவு, அறிவுத்திறம், செல்வ மேன்மை, செல்வாக்கு, இவற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் உயருகின்றனர். சமுதாயத்தால் அளிக்கப் பெற்ற இந்த நான்கு பேறுகளையும் கொண்டு மனிதன் சமுதாயத்திற்குக் கடனாற்ற வேண்டும். பிறந்தபோது தனி மனிதன் ஏதும் கொண்டு வந்ததில்லை. அதேபோல் அவன் இறக்கும்போது கொண்டுபோவதுமில்லை. எனினும் இறப்பை நோக்கி எல்லோரும் பிறக்கின்றோம்.

                பிறப்பிலிருந்து இறப்பு தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் காலமே வாழ்வாக இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ள ஆற்றல் சமுதாயத்தினுடையதே. சமுதாயத்தில் இருந்து தான் எல்லா ஆற்றலையும் பெற்றிருக்கும் உண்மையினை உணர்ந்தால் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவர்களே. அந்தக் கடனை உடல், அறிவு, உழைப்பின் மூலம் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். சமுதாயம் தனி மனிதனை உருவாக்குகின்றது; பாதுகாக்கின்றது; எல்லா ஆற்றலையும் அளிக்கின்றது. தனி மனிதன் அவன் பெற்ற ஆற்றல்கள் மூலம் சமுதாயத்திற்குப் பட்டுள்ள கடனை, அதற்கு அவன் தன் ஆற்றலை அர்ப்பணித்துத் தொண்டு செய்வதன்மூலம் திருப்பி அளித்துக்கொண்டு வரவேண்டும். இந்த உணர்வே "நிஷ் காமிய கர்மம்" (பயன் கருதாத  செயல்) ஆகும். நான் செய்யும் தொழிலுக்கு இன்னதைப் பதிலாகப்  பெறுவேன் என்ற கணக்குப் போட்டுச் செயல்புரிந்தால், அது காமிய கர்மமாகும். இது மயக்க நிலையில் எழும் தப்புக் கணக்கு.

              பிறந்தது முதல் இறக்கும்வரையில் எல்லோரையும் வாழ வைக்கின்றது சமுதாயம். அந்தச் சமுதாயத்திற்குத் தன் ஆற்றல் முழுமையும் அர்ப்பணித்து விட வேண்டியதுதானே நீதி. இந்தப் பேருிணர்வில் செயல்புரியும் போதுதான் , அது துறவறம் எனப்படுகின்றது. இவ்வாறத்தைப் பின்பற்றுபவர்கள்தான், தொண்டர்கள் (சந்நியாசிகள்), இந்தத் தொண்டினைக் குடும்பம் என்ற ஒரு சிறு வட்டத்தைத் தனது ஆற்றலுக்கு வரையறை செய்து கொண்டு செயல்புரிந்தால் அதுவே இல்லறம் ஆகும். இல்லறத்தார் எனில் பற்றுடையோர் என்றும், துறவறத்தார் எனில் பற்று இல்லாதவர் என்றும் பொருள் இல்லை. தனது தொண்டுக்கு உரிய பற்று ஒரு சிறு வட்டத்தை ஒட்டியதா?  என்பதைக் குறிப்பிடுவனவே இல்லறம் துறவறம் என்ற வேறுபட்ட சொற்கள். எனது அறிவு, செல்வம், செல்வாக்கு, உடல் வலிவு இவற்றிற்கு ஏற்ப நான் எனது வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டேன்.

               இல்லறமும் துறவறமும் இணைந்த ஒரு நல்லறமே எனக்கும் வருங்கால உலகுக்கும் நலமென முடிவு செய்துகொண்டேன். அந்த முடிவை விளக்குவதே கீழ்வரும் கவி :-

              "என் பிறப்பு என் இறப்பு
                   இரண்டையும் யானறியேன்
               எனினும் இவ்விரு நிகழ்ச்சி
                   என் உள்ளத்தில் கொண்டே
               பொன் முதலாய்ப் பொருளனைத்தும்
                   ஈட்டுகின்றேன் அவற்றைப்
               புவிவாழ்வின் இயல்பொக்கப்
                  பொதுநலமே கருதி
               நன்மை எனும் வழிகளிலே
                   வைத்துச் செலவாக்கி
               நற்சமயம் வாய்்க்குமெனில்
                  அனைத்தையும்நான் அளிப்பேன்
              இன்முகமும் இனிமையுமே
                   எனதுசெல்வம்; வீடோ
              ஏகவெளியென் றெண்ணி
                  யான்துறவு கொண்டேன்".

                எனக்கு லுங்கி வாணிபத்தில் மிகுந்த வருவாய் கிடைத்துக் கொண்டே போயிற்று. இந்த நிலையில் போஸ்டல் ஆடிட் ஆபிஸில் வேலை செய்வது எனக்குப் பொருந்தவில்லை.  மறுதலிப்பு (இராஜிநாமா) செய்துவிட வேண்டும் என்றே முடிவு செய்து கொண்டேன்.

 

 

Google